யூடியூபர் மதன் மீது போலீஸார் வழக்குப் பதிவு
யூடியூப் சேனலில் பெண்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் தலைமறைவான பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பல பகுதிகளிலும் பப்ஜி மதன் மீது புகாரளிக்கப்ப்பட்ட நிலையில் மதனை விசாரணைக்கு நேற்று வர சொல்லி புளியந்தோப்பு சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மதன் காவல்நிலையத்தில் ஆஜராகத்தால் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக போலீஸ் தேடிக் கொண்டிருக்கும்போதும் விபிஎன் மூலமாக ஆன்லைன் விளையாட்டிற்கு வந்த பப்ஜி மதன் தன்னை கைது செய்வது மூலமாக பேசுவதை ஒடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். அதேசமயம் வழக்கம்போல கெட்ட வார்த்தைகளில் பேசாமல் தத்துவமாக பேசியுள்ளார். பப்ஜி மதனின் யுடியூப் சேனல்களை முடக்கவும், மதனை கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், யூடியூபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், பப்ஜி விளையாட்டு மூலமாக சிறுவர்களிடம் ஆபாசமாகப் பேசியதாக வந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களை ஆபாசமாக பேசுதல் தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் மதன்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.