1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 18 ஜனவரி 2017 (11:35 IST)

’ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது’ - தமிழர்களுக்கு பீட்டா நிர்வாகி பகிரங்க சவால்

ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழர்களால் நடத்தவே முடியாது என்று பீட்டா அமைப்பின் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா சவால் விடுத்துள்ளார்.


 

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் எங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பீட்டா அமைப்பின் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ”பீட்டா உலகம் எங்கும் செயல்பட்டு வருகிறது. தமிழர்களால் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் போராடி வெற்றிபெற முடியாது.

இது, நான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் வெளிப்படையாக விடுக்கும் சவால்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கொதித்துப் போயிருக்கும் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.