1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 14 ஜூலை 2016 (13:49 IST)

பெரியாரின் வினா அர்த்தமுள்ளது; அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

தந்தை பெரியாரின் வினா அர்த்தமுள்ளது. அவரது விருப்பத்தை நிறைவேற்ற காமராஜர் வாழ்த்துப் பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பெருமை கர்மவீரர் காமராஜரையே சாரும். 1954 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி முறையை கைவிட்டார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டப் பள்ளிகளை திறந்ததுடன், தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை 27 ஆயிரமாக உயர்த்தினார்.
 
கல்விக்காக குழந்தைகள் அதிக தூரம் அலையக்கூடாது என்பதற்காக அனைத்து கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகளை தொடங்கினார். குழந்தைகள் கல்விக்கு பசி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு இப்போது மதிய உணவு வழங்கப்படுவதற்கு வழிகாட்டியாக விளங்கியவர் அவர். கல்வி முன்னேற்றம் தான் அவரது முதன்மை பணியாக இருந்தது.
 
ஒரு மாநிலமும், அதன் மக்களும் முன்னேற்ற என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் காமராஜர்  திட்டமிட்டு செயல்படுத்தினார். அவரது தொலைநோக்குப் பார்வை வேறு எந்த தலைவருக்கும் இல்லை.
 
கல்விக்கு அவர் ஆற்றிய பணிகளைப் பற்றி தந்தைப் பெரியார் குறிப்பிடும் போது, "கல்வி நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் காமராஜர் வாழ்த்துப் பாட வேண்டும். சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர் தோறும் தொழில் வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர்கள் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை எவரேனும் மறுக்க முடியுமா?" என்று வினா எழுப்பியிருந்தார்.
 
தந்தை பெரியாரின் வினா அர்த்தமுள்ளது. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக காமராஜர் வாழ்த்துப் பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.