திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (13:43 IST)

தொகுதி மக்களால் விரட்டியடிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்!

அதிமுக கட்சி சசிகலா அணி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்துள்ள நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு  தெரிவித்த 122 எம்எல்ஏக்களை மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

 
சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்த கட்சியில் இருந்தும் பொறுப்பில் இருந்தும் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார்.  இதனையடுத்து அதிமுகவில் வனத்துறை மற்றும் அதிமுக பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்கப்பட்டது.  கூவத்தூர் விடுதியில் அடைபட்டு இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு  பின்னர் தான் அவரவர் தொகுதிக்கு திரும்பினர்.
 
இந்நிலையில் இத்தனை நாள்கள் கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏ-க்கள், தங்கள் விருப்பத்தை மீறி சசிகலாவுக்கும், அவரது  கைப்பாவையான எடப்பாடிக்கும் ஆதரவு அளித்ததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவுக்கு  ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் யாரும் தொகுதி உள்ளே வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தனர். சில இடங்களில்  ஊருக்கு வெளியே எச்சரித்தும், எச்சரிக்கை பலகைகளை வைத்திருந்தனர்.

 
இதனை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் தன் தொகுதிக்கு திரும்பினார். அப்போது மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஊருக்குள் வந்த அவரது காரை சுற்றிவளைத்து மக்கள் கோஷமிட்டனர். கூட்டத்தில் இருந்த ஒருவர் சீனிவாசனின் வேட்டியை  பிடித்து இழுத்ததில் பதற்றமடைந்த சீனிவாசன் மற்றும் அவர் ஆதரவாளர்கள் காரில் அங்கிருந்து தப்பி சென்றார்.
 
மேலும் சீனிவாசனை எதிர்த்து திண்டுக்கல் முழுவதும் மக்கள் கண்டன போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். உங்களை  வன்மையாக கண்டிப்பதோடு, ஓட்டுப் போட்டமைக்காக வருந்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல்  சீனிவாசனுக்கே இந்த நிலையா என்று பதட்டத்தில் மற்ற  அதிமுக எம்எல்ஏக்கள்.