செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (16:54 IST)

டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் அபராதம் - சென்னை டிராஃபிக் போலீசார் அதிரடி

சென்னையில், இனிமேல் நீங்கள் டிராஃபிக் போலீசாரிடம் சிக்கினால் உங்களிடம் உள்ள டெபிட் அல்லது கிரெடிட் அட்டை மூலம் அபராதம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


 

 
பொதுவாக சென்னைவாசிகள், ஹெல்மெட் அணியாதது, நோ எண்ட்ரி, லைசன்ஸ் இல்லாதது, குடி போதையில் வாகனத்தை ஓட்டுவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக டிராஃபிக் போலீசாரிடம் அந்த இடத்திலேயே அபராதம் செலுத்துகிறார்கள். சில சமயம் நீதிமன்றம் சென்று செலுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. சில சமயம் பணம் எடுக்க ஏ.டி.எம்-ஐ தேடி அலைய வேண்டியுள்ளது.
 
அந்த சிக்கலை தவிர்க்கும் பொருட்டு, டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான எந்திரங்களும் போலீசாருக்கு வழங்கப்படவுள்ளது.
 
இதுபற்றி சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
 
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, வங்கிக் கடன் அட்டை அல்லது பற்று அட்டைகள் (கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள்) மூலம் செலுத்தலாம். இதற்கு வசதியாக இன்று முதல் 100 பிஓஎ இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த பிஓஎஸ் இயந்திரங்கள் மூலமாக அபராத தொகையை க்ரிடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் செலுத்தலாம். வங்கி அட்டைகள் இல்லாத, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள், அபராத தொகையை தற்போது நடைமுறையில் உள்ளவாறு ரொக்கமாகவும் செலுத்தலாம்.
 
போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்த இயந்திரங்கள் பயன்படுத்த உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து அபராத முறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரித்து ரொக்கமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை நோக்கிய நடவடிக்கையாகும்." என்று தெரிவித்துள்ளார்.