1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 22 செப்டம்பர் 2016 (05:15 IST)

மதனை பச்சமுத்து தரப்பினர்தான் அடைத்து வைத்துள்ளனர் - வழக்கறிஞர் வாதம்

மாயமான மதனை, பச்சமுத்து தரப்பினர்தான் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர் என்று மதன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
 

 
சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
 
இதனையடுத்து, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார். இதனால் அவரை கண்டுபிடித்துதரக் கோரி அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்தனர்.
 
மேலும், வேந்தர் மூவிஸ் மதன் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டிபிடிக்க உத்தரவிட்டது.
 
இது குறித்த வழக்கை விசாரிக்க காவல்துறை கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கு நீதிபதி ஏ.செல்வம், பொன்.கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது. மாயமான மதனை, பச்சமுத்து தரப்பினர் தான் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர் என்று மதன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
 
இதனை விசாரித்த நீதிபதிகள். "மதனை காவல்துறை கைது செய்து ஆஜர்படுத்தவில்லை என்றால், மாநகர ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என தெரிவித்தனர்.
 
மேலும் மதனை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இரண்டு வாரத்தில் மதனை கைது செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.