1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 நவம்பர் 2019 (16:03 IST)

தலித் மக்கள் குடியிருப்புகள் அகற்றம்! – அதிகாரிகளிடம் சீறிய பா.ரஞ்சித்

சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் தலித் மக்கள் குடியிருப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் இயக்குனர் பா.ரஞ்சித் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் கூவம் ஆறு புணரமைப்பு பணிகளுக்காக கடந்த வருடம் அங்குள்ள 800 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவர்களில் சிலருக்கே குடிசை மாற்று வாரியம் மாற்று வீடுகளை ஒதுக்கியுள்ளது. மற்றவர்களுக்கு இன்னமும் வீடுகள் கிடைக்காத நிலையில் மேற்கொண்டு சில குடியிருப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்துள்ளனர்.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த இயக்குனர் பா.ரஞ்சித் இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பிறகு அதிகாரிகளிடம் அவர் கேள்வி கேட்டபோது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ரஞ்சித் இந்த அரசு சென்னையின் பூர்வகுடி மக்களை திட்டமிட்டு அகற்றி வருவதாக குறிப்பிட்டார். மேலும் அதிகாரிகள் இங்குள்ள மக்களை தகாத முறையில் நடத்துவதாகவும், தான் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.