செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 ஏப்ரல் 2025 (14:02 IST)

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சாதிப் பெயரை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் அரசு பள்ளி, கல்லூரிகள் தவிர்த்து தனியாரால் நடத்தப்படும் ஏராளமான பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்வி நிலையங்கள் பல சாதிப் பெயர்களை கொண்டிருப்பதாக உள்ளது. பெரும்பாலும் பள்ளி, கல்லூரியை தொடங்கியவர் பெயரை வைக்கும்போது பின்னொட்டாக அவரது சாதிப் பெயரும் அதில் இடம்பெற்றிருக்கிறது. 

 

அதுபோல சாதிகள் பெயரில் சங்கங்கள், அறக்கட்டளைகளும் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறாக சமீபத்தில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக் கொள்ள சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்தூ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “சாதிகளின் பெயரில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள சங்கங்கள் சாதிப்பெயரை நீக்கி தருத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவை சட்டவிரோதமானவை என அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் கல்வி நிறுவனப் பெயர்களில் சாதிப்பெயரை நீக்குவது குறித்து உத்தரவிட்ட நீதிமன்றம், “கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயரை நான்கு வாரங்களுக்கு நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். பள்ளிகளின் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர்கள் இடம்பெறலாம். ஆனால் அவர்கள் சாதிப்பெயர் இருக்கக் கூடாது.

 

அரசு நடத்தும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி, கள்ளர் பள்ளி போன்றவற்றில் உள்ள பெயர்களை மாற்றி அரசுப்பள்ளி என்றே பெயரிட வேண்டும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K