செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2022 (14:27 IST)

அதிமுக நாளேட்டில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்! – ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக நாளேட்டிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

இந்நிலையில் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் நடைபெறும் என அதிமுக சபாநாயகர் தமிழ்மகன் உசேன் அறிவித்திருந்தார். ஆனால் பொதுக்குழு கூட்டத்தை சபாநாயகர் முடிவு செய்ய உரிமையில்லை. ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் பேசி வருகின்றனர்.

அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடேனா “நமது அம்மா” வின் நிறுவனர்களாக எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது நமது அம்மா நாளிதழின் நிறுவனர்கள் பெயரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.