45 நீதிபதிகளை நியமனம் செய்ய தேர்வு.. ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை. ஒடிசாவில் அதிர்ச்சி..!
ஒடிசா மாநிலத்தில் 45 மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்ய தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அந்த தேர்வு எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் காலியாக உள்ள 45 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய மாநில உயர்நீதிமன்றம் அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, பார் கவுன்சிலில் இருந்து நேரடியாக நியமனம் செய்யும் முறையில் 31 பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன. மேலும், நேரடி போட்டித் தேர்வுகள் மூலம் 14 நீதிபதிகள் நியமிக்கப்பட இருந்தனர்.
இந்த நிலையில், தேர்வுகள் நடத்தப்பட்டு சமீபத்தில் முடிவுகள் வெளியானது. இரண்டு வகையாக நடந்த இந்த தேர்வில் 366 பேர் பங்கேற்றிருந்தனர். ஆனால், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 45 மதிப்பெண் பெற்றாக வேண்டும் என்று மூன்று தாள்களுக்கு தேர்வு வைக்கப்பட்ட நிலையில், ஒருவரும் வெற்றி பெறாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, மீண்டும் தேர்வு நடத்துவார்களா? தேர்ச்சி சதவீத மதிப்பெண் அளவை குறைப்பார்களா? என்பது குறித்து நீதிபதிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Edited by Mahendran