முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்
கடந்த சில மாதங்களாக தமிழகத்திற்கு மழை கொடுத்துக் கொண்டிருந்த வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், பொங்கலுக்கு பின் பருவக்காற்று முழுமையாக விலகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில், அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரை, தமிழகத்தில் 59 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையை விட, 2024 ஆம் ஆண்டு 28 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது எனவும் அவர் கூறினார். அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
திருநெல்வேலி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நேரத்தில் இயல்பை விட மிக அதிகமாக, 59 சதவீதத்திற்கும் மேல் மழை பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31-இல் முடிவடைந்தாலும், வடகிழக்கு பருவ காற்று பொங்கலுக்கு பிறகு முழுமையாக விலகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Siva