1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 மார்ச் 2025 (10:59 IST)

சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

Vegetables
சென்னையில் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
 
2025-26ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை இன்று தமிழக சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்து உரையாற்றினார்.
 
அதில், சென்னையில் பொதுமக்களுக்கு காய்கறி தேவையை முழுமையாகச் சமன் செய்ய, 1,200 ஏக்கரில் பந்தல் வகை காய்கறி சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 9 லட்சம் குடும்பங்களுக்கு 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75% மானியத்துடன் வழங்கப்படும்.
 
ஒன்றிணைந்த தென்னை வளர்ச்சிக்காக ரூ.35.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஊரகப் பகுதிகளில் காளான் உற்பத்தியை ஊக்குவிக்க மானியம் வழங்கப்படும். 50 லட்சம் ஏக்கரில் துவரை சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
பாரம்பரிய காய்கறி ரகங்கள் 2,500 ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.2.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள் மற்றும் பிற உடனடி தேவையான பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
 
மலர் விவசாயிகளை மேம்படுத்த ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் உற்பத்தியில் முன்னோடி சாதனை படைத்த 100 உழவர்களை ஜப்பான், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று, முன்னேறிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதற்கான திட்டமும் செயல்படுத்தப்படும்.
 
Edited by Mahendran