திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (16:57 IST)

அதிமுகவை விளாசிய கமல்ஹாசனை பாராட்டித் தள்ளிய நாஞ்சில் சம்பத்

தற்போதுள்ள அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசனை அதிமுக பிரச்சாரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பாராட்டி கருத்து தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் திராவிட இயக்கத்தை சற்று முழுமையாக அலசினார். 
 
இந்நிலையில், அவரது பேட்டி குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் “ புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப்பரீட்சையில் நிரந்தர இளைஞன் என் நெஞ்சம் நிறைந்த கலைஞன் தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் நடிகர் கமலஹாசன் நேற்று திராவிட இயக்கம் குறித்து சிலாகித்து பேசியது எனக்குள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. 
 
தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிட இயக்கம் இருக்கும். திராவிட இயக்கம் என்பது பூகோள ரீதியிலானது என்று அவர் சொன்னது செவியில் தேனாய் விழுந்தது.அவருடைய பரந்த பட்டறிவும் நிரம்பியநூல் அறிவும்தான் அவர் இப்படி கருத்து சொல்வதற்கு காரணம். மனோன்மணியம் தந்த பேராசிரியர் டாக்டர். சுந்தரம் பிள்ளையின் படைப்புகளை கமலஹாசன் ஆழ்ந்து வாசித்தாலும் அது குறித்து நீளயோசித்ததனாலும் இந்த கருத்தை வெளிபடுத்தியிருக்கிறார். 
 
திராவிட இயக்கம் என்பது காலத்தீயில் கருகிப் போகாத தத்துவம் அதன் பரிணாமத்தை வெளிப்படுத்திய நடிகர் கமலஹாசனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் திராவிட இயக்க மாட்சியை வியந்து பேசிவருகிற நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
இதே பேட்டியில், மக்கள் விரும்பாத நிலையில் தமிழகத்தில் அரசு நான்கு ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. தமிழகத்தில் தேர்தல் விரைவில் நடைப்பெற வேண்டும் என கமல்ஹாசன், தற்போதைய அதிமுக அரசிற்கு எதிரான கருத்தையும் தெரிவித்தார். 
 
இந்நிலையில், அந்த கட்சியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், கமல்ஹாசனை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.