திமுகவினர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர்: புதுவை நமச்சிவாயம் கண்டனம்
திமுகவினர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர்: புதுவை நமச்சிவாயம் கண்டனம்
திமுகவினர் தரம் தாழ்ந்து பேசி வருவதாகவும் அதனை உடனே அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் புதுவை சட்டமன்ற பாஜக தலைவர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவாவும், இலக்கியவாதி, தமிழ் பற்றாளர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப.வீரபாண்டியனும் அரசியல் வரம்பு மீறி அநாகரிகத்தோடு பேசி வருகின்றனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி பற்றியும், பா.ஜ.க. குறித்தும் தரம் தாழ்ந்து பேசி வருவது கண்டனத்துக்குரியது.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட தி.மு.க.வினர் அரசியல் தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்தி கொள்ளவேண்டும். 356-வது சட்டப்பிரிவு, கவர்னர், சபாநாயகர் மூலமாக ஆட்சியை கவிழ்த்ததில், அகில இந்திய அளவில் கின்னஸ் சாதனை புரிந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு, ஜனநாயகத்தை பற்றி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.
1990-ம் ஆண்டு ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தி.மு.க. கூட்டணி அல்லாடிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் நியமன எம்.எல்.ஏ.க்களை பதவியேற்க வைத்து ஆட்சி அதிகாரப் பசியை குறுக்கு வழியில் தீர்த்துக் கொண்டது, சிவா போன்ற குறுகிய அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்கள் நலத்திட்டங்களை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்து வருகிறார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமைச்சரவை விரிவாக்கம் சம்பந்தமாக நடைபெறும் எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை சிவா, சுப.வீரபாண்டியன் போன்றோர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இனியும் தரம் தாழ்ந்து பேசினால் பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயக கூட்டணியும் தக்க பதிலடி கொடுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி, குறுக்கு வழியில் பதவி பெறலாம் என்கிற குறுகிய எண்ணத்தோடு விமர்சனம் செய்கின்ற சிவாவின் பகல் கனவு என்றும் பலிக்காது.
இவ்வாறு நமசிவாயம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.