1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (14:40 IST)

மரணத்தை மறைப்பது எவ்வளவு கேவலம்: ஈபிஎஸ்-க்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை விடுபட்டுவிட்டதாகவும், அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
அதன்படி கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை, நிகழ்ந்த மரணங்களில் 444 இறப்புகள் விடுப்பட்டுள்ளன. விடுபட்ட 444 மரணங்களையும் கொரோனாவால் நிகழ்ந்தவையாக கருதி, அந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார். 
 
இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம். 
 
மறைக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமானதால் வெளியே சொல்லி விட்டார். கொரோனா மரணத்தை போல் கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.