Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2016 (14:13 IST)
சந்திக்க சென்ற ஸ்டாலின் எஸ்கேப் ஆன ஓ.பன்னீர்செல்வம்!
சந்திக்க சென்ற ஸ்டாலின் எஸ்கேப் ஆன ஓ.பன்னீர்செல்வம்!
காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கூட்டாததால் கடந்த 25-ஆம் தேதி எதிர்க்கட்சியான திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூடியது.
இந்த கூட்டத்தில் மக்கள் நல கூட்டணி கட்சிகள், தேமுதிக, அதிமுக கூட்டணி கட்சிகள், பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தவிர மற்ற கட்சிகளும், விவசாய சங்கங்களும் கலந்து கொண்டன.
இந்த கூட்டத்தின் போது 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, காவிரி தொடர்பாக சிறப்பு சட்டப்பேரவையை கூட்ட வேண்டும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் போன்றவை.
இந்த தீர்மானத்தின் நகலை திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்வரின் பொறுப்புகளை கூடுதலாக கவனித்து வரும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்க தலைமை செயலகத்துக்கு சென்றனர்.
அவருடன் துரைமுருகன், ரங்கநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரும் உடன் சென்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து இந்த தீர்மானத்தின் நகலை கொடுக்க அவரது அறைக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை என்பதால் அவரது அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, தலைமை செயலாளரிடமும் கொடுத்ததாக மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.