1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 மே 2020 (13:36 IST)

ஆன்லைன் கிளாஸ் நடத்துவதை தடுக்க முடியாது! – பல்டி அடித்த அமைச்சர்!

ஆன்லைன் கிளாஸ் எடுக்கக்கூடாது என்று சற்றுமுன்னர் அறிவித்த நிலையில் தற்போது ஆன்லைன் கிளாஸ் எடுப்பதை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 1 முதல் 9ம் வகுப்புகள் வரை தேர்வுகள் நடைபெறாத சூழலில் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் ஆகஸ்டு மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் சில தற்போதே மாணவர்களுக்கு அடுத்த வகுப்புகளுக்கான பாடங்களை ஆன்லைன் மூலமாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறக்கும் முன்பு ஆன்லைன் கிளாஸ் எடுக்க கூடாது என்றும், ஆன்லைன் கிளாஸ் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அறிவிப்பு வெளியாகி சிறிது நேரத்திலேயே சில மாற்றங்களுடன் மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் “ஆன்லைன் கிளாஸ் நடத்துவதை தடுக்க முடியாது. ஆனால் பள்ளிக்கு வர சொல்லி பாடம் நடத்த முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.