1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2016 (15:39 IST)

’காதலிக்கும் ஆண்கள் பாலியல் வடிகாலாக பயன்படுத்துகின்றனர்’ - திருநங்கை பிரியா பாபு உருக்கம்

திருநங்கைகளின் காதலை பெரும்பாலான ஆண்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், பலர் திருநங்கைகளை பாலியல் வடிகாலாகப் பயன்படுத்திவிட்டு விலகிச் செல்கிறார்கள் என்று பிரியா பாபு கூறியுள்ளார்.
 

 
புதுக்கோட்டையில் நடைபெற்ற வீதி இலக்கிய கூட்டத்தில் பங்கேற்ற பேசிய பிரியா பாபு, ”திருநங்கைகள் என்றால் சிலர் கேவலமாக நடத்துவதும், சிலர் தெய்வநிலைக்கு உயர்த்துவதும் உள்ளது. எங்களை ஒரு மனிதப் பிறவியாக நடத்த வேண்டுமென்பதே எங்களின் விருப்பம்.
 
உடம்பில் ஆணாகவும் மனதில் பெண்ணாகவும் உள்ள நிலையில், உடம்புக்கு ஏத்தமாதிரி மனசை மாற்றுவதா? மனசுக்கு ஏத்தமாதிரி உடம்பை மாற்றுவதா என நாங்கள் படும் சிரமத்திற்கு அளவே இல்லை.
 
பதின்பருவத்தில் திருநங்கைகளின் காதலை பெரும்பாலான ஆண்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், அவர்களும் அதே பருவத்தில் இருப்பதால் அவர்களில் பலர் திருநங்கைகளை பாலியல் வடிகாலாகப் பயன்படுத்திவிட்டு விலகிச் செல்கிறார்கள். ஆயினும், எங்களை ஒரு பெண் என இந்த சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் முதல் நபராகவும் அவர்களே இருக்கின்றனர்.
 
இந்த சமூகம் எங்களைப் பார்த்துக் கற்றுகொள்ளும் வகையில் எங்களுக்குள் சாதியப் பாகுபாடும் இல்லை. சாதி குறித்து பேசினால் எங்கள் சமூகத்திற்குள் கடுமையான தண்டனை உண்டு. வடமாநிலங்களில் திருநங்கைகளைப் பார்த்தால் உடனடியாக காலில் விழுகின்றனர். கேட்டால் நீங்கள் தெய்வப்பிறவி என்கிறார்கள்.
 
இங்கே திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. அதற்குக்காரணம் கம்யூனிஸ்ட்டுகளும், பெரியாரிஸ்ட்டுகளுமே. திருநங்கைகள் நலவாரியம் குறித்து சட்டமன்றத்தில் குரல்கொடுத்தவர்கள் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள் டில்லி பாபுவும், பாலபாரதியும்.
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் எங்களுக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. அந்த அமைப்பில் நான் உள்ளிட்ட திருநங்கைகள் மாநிலக்குழு உறுப்பினராக இணைக்கப்பட்டோம். அவர்கள் நடத்திய கலை இலக்கிய இரவுகளில் நாங்கள் இயக்கிய நாடகத்தை தமிழகம் முழுவதும் அரங்கேற்றினர். அது மிகப்பெரிய அடையாளத்தை எங்களுக்குப் பெற்றுத்தந்தது" என்றார்.