திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (09:53 IST)

தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு: திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ!

தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு: திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ!

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுர இல்லத்தில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க இருக்கிறார்.


 
 
அதிமுக அணிகள் இணைந்துள்ள நிலையில் தினகரன் அணி ஆட்சியை கலைக்கவா வேண்டாமா என்ற நிலையில் உள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவியே வருகிறது. இந்த சூழலில் திமுக தலைவர் கருணாநிதியை மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 
வைகோவுடன் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மதிமுக முக்கிய தலைவர்கள் கருணாநிதியை சந்திக்க செல்கின்றனர். முன்னதாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திமுக தொண்டர்கள் வைகோ மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனால் கருணாநிதியை சந்திக்காமல் திரும்பிவிட்டார் வைகோ. தொண்டர்களின் இந்த செயலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
சமீபத்தில் வைகோ விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்பதால் மலேசியாவில் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் முரசொலி பவள விழாவுக்கு வைகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் வைகோவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் விழா வெற்றிபெற வாழ்த்து கூறியிருந்தார்.
 
எலியும், பூணையுமாக இருந்த திமுக, மதிமுக உறவில் தற்போது சுமூகமான நிலை நிலவுகிறது. இந்த சூழலில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் வைகோ கருணாநிதியை சந்திக்க செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் கடந்த 8 மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.