1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (12:13 IST)

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

Makkal Neethi Maiyam
ஒரே ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளித்து வருகிறது என்றும் கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்றும் மக்கள் நீதி மையம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது. தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கும் சூழலில், இன்னும் கூடுதல் ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சென்னையில் பல நூறு கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டன.
 
இதனால் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்பு அளவுக்கு, தற்போதைய மழையின் போது பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. அதேசமயம், ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளித்ததைக் காண முடிந்தது. சென்னையின் பல நெடுஞ்சாலைகளில் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவித்தனர். இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் மக்கள் வேதனைக்குள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும், வியாசர்பாடியில் ஒரு ஆட்டோ டிரைவர் மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்துள்ளனர். இனி ஒரு உயிரைக்கூட மழைக்குப் பறிகொடுக்காத அளவுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். நகரின் பல்வேறு பகுதிகளில் சாய்ந்த மரங்களை அகற்றுவதிலும், தண்ணீரை வெளியேற்றுவதிலும் மாநகராட்சி ஊழியர்கள் மழையையும் பொருட்படுத்தாது பணியாற்றியது பாராட்டுக்குரியது. 
 
அதேபோல, மின் கம்பங்கள், வயர்கள் பராமரிப்பு, சீரமைப்பு தொடர்பாக மின் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அதேசமயம், இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தற்போதைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
மழை பெய்யும்போது மட்டுமே, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நிரந்தரத் தீர்வாகாது. பேரிடர் மேலாண்மை மற்றும் பருவ மழையை எதிர்கொள்வதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பணியாகக் கருதி, ஆண்டு முழுவதும் இதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மழையின்போது எந்த சாலையிலும் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்குவது என்ற லட்சியத்தை வகுத்து, அதை அடையும் நோக்கில் செவ்வனே பயணிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
 
Edited by Mahendran