மதுரவாயல், ராயபுரம் தொகுதிகளில் கனிமொழி போட்டியிட விருப்ப மனு தாக்கல்
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மதுரவாயல் மற்றும் ராயபுரம் ஆகிய தொகுதிகளில் கனிமொழி போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயரில்தான் அதிக அளவு விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயரில் பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, ஆலந்தூர், திருப்போரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
இவருடன் மாவட்டம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் வந்திருந்து மனுதாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், கனிமொழி ராயபுரம் தொகுதியில் போட்டியிட உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சசிகுமார் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
இதே போல, மதுரவாயல் தொகுதியில் கனிமொழி போட்டியிட வலியுறுத்தி மதுரவாயல் பகுதி துணை செயலாளர் ரமேஷ் ராஜ் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.