நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் அதிரடி
நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கிளை, தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
மே மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் வரும் ஜுன் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படவில்லை என்றும், இதனால் இதை பொது நுழைவுத் தேர்வாக கருத முடியாது என்றும், திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்கொடி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வரும் ஜுன் மாதம் 7ஆம் தேதி சிபிஎஸ்சி செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.