2026ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும்: மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்
2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அனுப்ரியா பட்டேல் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அப்னா தளம் கட்சியை சேர்ந்த அனுப்ரியா பட்டேல், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு 2015ஆம் ஆண்டில் வெளியானதாகவும், அதன் அடிக்கல் நாட்டுதல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், 2026 அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்றும், அந்த பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாநில வாரிய பாடத்திட்டங்களுக்கு உகந்த வகையில் நீட் தேர்வு பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற பின்னணியில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றது இதற்கு சான்று எனவும் அவர் தெரிவித்தார்.
ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து பின்னணியில் உள்ள மாணவர்கள் ஒரே தேர்வை எழுதி ஒரே கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு பெறுகிறார்கள்; இதனால் உள்ள சில குளறுபடிகள் கண்டறியப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Edited by Siva