1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 19 அக்டோபர் 2016 (14:04 IST)

சரக்கடித்துவிட்டு இலவசமாக காரில் வீட்டிற்கு செல்ல வேண்டுமா? : இவர்களை அழையுங்கள்....

சரக்கடித்துவிட்டு இலவசமாக காரில் வீட்டிற்கு செல்ல வேண்டுமா? : இவர்களை அழையுங்கள்....

சென்னையில் உள்ள பார்களில் மது அருந்தி விட்டு, போதை தலைக்கேறியதும், வீட்டிற்கு பத்திரமாக அதுவும் இலவசமாக காரில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்புவர்களுக்கு தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் உதவ முன்வந்துள்ளது.


 

 
சென்னை போன்ற பெரு நகரங்களில், நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவு முழுவதும் மது அருந்தி விட்டு, வேகமாக காரை செலுத்தி, விபத்துகளை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. என்னதான், போலிசார் வாகன சோதனை செய்தாலும் எல்லோரையும் பிடிக்க முடிவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
 
சமீபத்தில் கூட ஐஸ்வர்யா என்ற பெண், மிதமிஞ்சிய போதையில் ஆடி காரை செலுத்தி, சென்னையை சேர்ந்த ஒருவரின் மீது மோதி அவரின் உயிரை பறித்தார். நடிகர் அருண்குமார் போதையில் காரை செலுத்தி போலீசார் வாகனத்திலேயே இடித்தார்.
 
எனவே, இவ்வாறு  நடக்கும் விபத்துகளை தடுப்பதற்காகவும், அப்பாவி உயிர்கள் உயிரிழப்பதை தடுப்பதற்காகவும், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
இதுபற்றி கருத்து தெரிவித்த மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் பி.செல்ல பாண்டியன் “இந்த திட்டம் சமூக சேவைக்காகவே தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளி முதல் இத்திட்டத்தை அமுல்படுத்த உள்ளோம்.
 
மது அருந்த செல்பவர்கள், முதலில் எங்கள் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ள வேண்டும்..  அதேபோல், அவர்களின் பயன்படுத்தும் கார், காரின் எண், மாடல், மது குடிக்க செல்லும் நேரம் மற்றும் வெளியே வரும் நேரம் ஆகியவற்றை பதிவு செய்து விட வேண்டும்.
 
மது போதையில் காரை செலுத்த முடியாது என்று கருதபவர்கள் எங்களை அழைத்தால், எங்கள் கார் டிரைவர்கள், அவர்கள் மது அருந்தும் இடத்திற்கு முன் கூட்டியே சென்று, காத்திருந்து அவர்களை பத்திரமாக வீட்டில் சென்று சேர்த்து விடுவார்கள். இதற்காக அவர்கள் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. 
 
விபத்துகளை தடுக்கவும், அப்பாவி உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம்’ என்று கூறினார்.
 
நல்ல திட்டம்தான்... ஆனால், நட்சத்திர ஹோட்டல் மற்றும் பார்களுக்கு காரில் செல்லும் வசதி படைத்தவர்கள், இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக சேருவார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி....