வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (21:12 IST)

தடுப்பை மீறி நுழைய முயன்ற வழக்கறிஞர்கள் - போலிஸுடன் வாக்குவாதத்தால் பரபரப்பு

சட்டத் திருத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் வழக்கறிஞர் ஈடுபட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது.
 
இந்த புதிய வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
உயர்நீதிமன்றம் வெளியே ஆவின் நுழைவு வாயிலில் 1000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திங்களன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ஊர்வலமாக சென்று வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சட்ட விதி திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 
ஆனால், ஆவின் நுழைவு வாயில் அருகே குழுமியிருந்த வழக்கறிஞர்கள் காவல் துறையினரின் தடுப்பை மீறியும் உயர் நீதிமன்றத்துக்குள் நுழைய முற்பட்டனர். இதனால் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.