1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2016 (13:04 IST)

திமுக கொடுத்த விளம்பரம் : லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி

அதிமுக-வை கலாய்த்து திமுக சார்பில் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்ட விளம்பரம் பற்றி நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய நிலைப்பாட்டை கூறியுள்ளார்.


 

 
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பயன்படுத்திய வசனம்தான் “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”. அந்த வரி தமிழகம் முழுவதும், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.
 
விடுவார்களா தொலைக்காட்சி நிறுவனங்கள்.. விஜய் டிவியில்  ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் ஒருவர் பெண் போல் வேடம் அணிந்து அந்த வசனத்தை திரும்ப திரும்ப கூறியே பிரபலமானார். வசனமும் பிரபலமானது. ஆரம்பத்தில் அதை ரசித்த லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய் டீவி ஏகத்துக்கும் அவரை கலாய்க்க கொதித்து எழுந்தார்.
 
இதுபற்றி சென்னை கமிஷனர் வரை போய் புகார் கொடுத்தார். ஆனாலும் அவர்கள் நிறுத்தியபாடில்லை. அந்த பஞ்சாயத்து ஒரு புறம் போய் கொண்டிருக்க, மறுபுறம் திரைப்படங்களிலும் அந்த வசனத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர். பாடல்களிலும் அது எதிரொலித்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ரஜினி முருகன் படத்தில் ‘என்னம்மா இப்படி பன்றீங்களேமா’ என்று தொடங்கும் ஒரு முழுபாடலே வெளியானது.
 
அந்த பாடல் பற்றி கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன், அந்த வரி ஒரு தனியார் காட்சியின் நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டது என்றும், உண்மையான வசனத்திற்கு சம்பந்தமில்லை என்று பதில் கூறினார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
 
இப்படி போய் கொண்டிருந்த வேளையில், நேற்று அனைத்து முக்கியமான தமிழ் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் திமுக சார்பில் ஒரு தேர்தல் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் “5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க.. பேனர்ல பாத்திருப்பீங்க.. ஏன் டிவியில பாத்திருப்பீங்க... நேர்ல பாத்திருக்கீங்களா?” என்று போட்டு அதன் கீழ்   ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று குறிப்பிட்டிருந்தது.
 
இதுபற்றி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், அடுத்தக் கட்டமாக, அந்த வார்த்தைகள் அரசியலாகி இருக்கின்றன. நான் எந்தக் கட்சியையும் சேராதவள். ஆனால் என் வார்த்தைகள் நியாயத்தின் குரலாக ஒலிக்கும் எனில், அதற்காக நான் சந்தோஷம்தான் படுவேன் என்று கூறியிருந்தார்.
 
மற்றவர்கள் கூறும்போது கோபப்பட்ட அவர், திமுக பயன்படுத்தியது போது மட்டும் ஏன் கோபப்படவில்லை என்று சமூகவலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர். இதற்கு விளக்கம் கொடுத்த அவர் “நான் அப்படி எந்த கருத்தும் கூறவில்லை. நான் முதலமைச்சர் அம்மாவுக்கு எதிரானவர் கிடையாது. இந்த ஆணாதிக்க உலகத்தில் அவர் சாதித்த விஷயங்களைக் கண்டு நான் பிரமிக்கிறேன். அந்த விளம்பரம் என்னைக் குறி வைக்கவில்லை. ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ விவகாரத்தில் இனியும் நான் நேரத்தைச் செலவழிக்கமாட்டேன் என்று பத்திரிகைகளிடம் கூறிவிட்டேன்” என்று பதிலடி கொடுத்தார்.