1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2017 (13:21 IST)

சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் முதல் எதிர்ப்பு குரல்: கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி!

சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் முதல் எதிர்ப்பு குரல்: கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி!

அதிமுகவையும் சொத்தையும் கைப்பற்ற நினைக்கும் நடராஜன் திவாகரன் ஆகியோருக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 
 
கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய அவர் தஞ்சையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவரான நடராஜன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திவாகரன் கலந்துகொண்டு பேசிய போது அதிமுகவை துவங்கியது முதல் தாங்கள் தான் நிர்வாகித்து வருவதாகவும் பேசியுள்ளார். புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் எங்கள் மாமா நடராஜன் தான் மீட்டார் எனவும் பேசியுள்ளார்.
 
அவருடைய இந்த பேச்சால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். புரட்சி தலைவருக்கு பிறகு அதிமுகவையும் சின்னத்தையும் மீட்டவர் அன்னியார் ஜானகி அம்மாள் அவர்கள். அவருடைய ஒத்துழைப்பின் பேரில் ஜெயலலிதா அவர்கள் வழி நடத்தி கட்சியை காப்பாற்றி தற்பொழுது ஒன்றரை கோடி தொண்டர்களுடன் வளர்ந்து மாபெரும் இயக்கமாக இருக்கிறது.
 
ஆனால் இதையெல்லாம் மறைத்து அதிமுகவையும் அதிமுக சின்னமான இரட்டை இலையையும் அதன் சொத்துக்களையும் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றும் வகையில் அவர்களுடைய பேச்சு அமைந்துள்ளது. புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களால் நீக்கப்பட்டு கட்சியில் எந்த ஒரு அடிப்படை பொறுப்பிலும் இல்லாத இவர்கள் இது போன்று பேசுவதை அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கடுமையாக கண்டிக்கிறோம்.
 
திவாகரன் இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். 
 
புரட்சி தலைவி ஜெயலலிதா அவரால் நியமிக்கப்பட்ட அவருக்கு பின்பும் முதல்வராக இருக்க கூடிய முதல்வர் ஓ.பி.எஸ் மக்கள் எளிமையாக சந்திக்கும் முதல்வராக செயல்படுகிறார். வர்தா புயலின் போது நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதும், சென்னை மக்களின் குடி நீர் தேவைக்கு ஆந்திரா சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து பேசி கிருஷ்ணா நதி நீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
 
இப்படி இருக்கும் நிலையில் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். நடராஜன் திவாகரன் பேச்சால் புதியதாக பொறுப்பு ஏற்று இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இதற்கு உடனடியாக அதிமுக தலைமை உரிய நடவடிக்கை எடுத்து முற்றுபுள்ளி வைக்க வேண்டும். அதிமுகவை யாரும் கைபற்றவும் அழிக்கவும் ஒன்றரை கோடி தொண்டர்கள் விட மாட்டோம். தலைமை பொறுப்புக்கு யார் வந்தாலும் அவர்கள் உத்தரவிற்கு விசுவாசமாக பணியாற்றுவோம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.