ஜெயலலிதாவை வரவேற்க கருணாஸ் புது திட்டம்: போயஸ் கார்டன் வரை ’சரவெடி’


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 24 அக்டோபர் 2016 (18:00 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்புகையில் அவரை வரவேற்க மருத்துவமனையில் இருந்து போயஸ் இல்லம் வரை சரவெடி வெடிக்க உள்ளதாக நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
 
 
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
 
மேலும், அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் தொடர்ந்து பூஜை, யாகம் மற்றும் பிரார்த்தனைகள் அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா குணமடைந்து வீடு திரும்புகையில் அவரை வரவேற்க புது திட்டம் வைத்திருப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கருணாஸ் கூறுகையில், “சமூகவிரோதிகள் சிலர் தமதிழக முதல்வர் உடல் நலன் பற்றி வதந்திகளை பரப்பினர். அவை அனைத்தையும் முறியடித்து முழு ஆரோக்கியம் பெற்றுவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தீபாவளி அன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.
 
அவரை வரவேற்ற ஒரு லட்சம் குதிரைப் படை வீரர்களை திரட்டி தயாராக வைத்திருக்கிறோம். மேலும், முதல்வருக்கு யானைகள் மாலையிட்டு வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அதோடு, அப்போல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வரின் போயஸ் கார்டன் இல்லம் வரை விடாது வெடிக்கும் சரவெடிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. இது உலக சாதனையாகும்” என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :