1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (06:40 IST)

மக்களை தூண்டி விடுவது கமல்ஹாசனுக்கு அழகில்லை: ரித்தீஷ்

தமிழக அமைச்சர்கள் மீது கடந்த சில நாட்களாக ஊழல் புகார்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமல்ஹாசனுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு குவிந்துள்ள நிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ், கமல்ஹாசன் ஆதாரம் இல்லாமல் புகார் கொடுக்கும்படி மக்களை தூண்டிவிடுவது சரியல்ல என்று கூறியுள்ளார். 



 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கடுமையாக விமர்சித்து வரும் கமல்ஹாசன் முதலில் தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும்.
 
கமல் சின்ன வயதிலிருந்தே நடித்து கொண்டிருக்கலாம். வெவ்வேறு வேடங்களும் நடித்திருக்கலாம். ஆனால் அவரை நம்பி படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை என்பது தான் உண்மை. ஒரு தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கொடுக்கும் அளவுக்கு அவருடைய படங்கள் ஓடுவது இல்லை.
 
ரஜினி, அஜீத், சிவகார்த்திகேயன் போன்றவர்களை தயாரிப்பாளர்கள் தேடி ஓடுகிறார்கள். கமலைத் தேடி எந்த தயாரிப்பாளரும் செல்வதில்லை. எந்த அமைச்சரும் தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். தன்னிடம் ஆதாரம் இருந்தால் தாராளமாக முதல்வரை சந்தித்து கமல் கொடுக்கலாம். அதை விடுத்து டுவிட்டரில் கொடு, வாட்ஸ்-அப்பில் கொடு என்று மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை' என்று ரித்தீஷ் கூறியுள்ளார்.