1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (10:42 IST)

காலில் தண்ணீர் படாமல் வெள்ளத்தை பார்வை இட்டவர் ஜெயலலிதா - ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா காலில் தண்ணீர் படாமல் காரிலிருந்தவாரே மழை வெள்ளப் பாதிப்பு குறித்து ஒரு விஸிட் அடித்து விட்டு போய் விட்டார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சிம்லா முத்துச்சோழனை ஆதரித்து பேசிய மு.க.ஸ்டாலின், ”தேர்தலுக்கு மட்டும் வந்து செல்லக் கூடியவர்கள் நாங்கள் இல்லை. எந்த நேரத்திலும் உங்களை தேடி வரக் கூடியவர்கள் நாங்கள். முதலமைச்சராக உள்ள ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு விட்டு செல்வார்.
 
பொய்களை சொல்லி அதே நேரத்தில் ஆட்சியை பயன்படுத்தி கொள்ளை அடிக்கக் கூடிய ஒரு கூடாரத்தின் தலைவியாக இருப்பவர்தான் அம்மையார் ஜெயலலிதா என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
 
இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எடுத்துப் பார்த்தால் தனது தொகுதிக்கே வராத ஒரு சட்டமன்ற உறுப்பினர் யார் என்றால் அது இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும்தான்.
 
நான் துணை முதல்வராக இருந்தபோதும் இங்கு வந்தேன், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நேரத்திலும் வந்தேன். 2 முறை சென்னை மேயராக பொறுப்பேற்ற போது இந்த தொகுதிக்கு, பகுதிக்கு, ஒவ்வொரு தெருவிற்கும் எத்தனை முறை வந்தேன் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். அதேபோல கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இல்லாத போதும் பலமுறை வந்தேன்.
 
ஆனால் ஜெயலலிதா ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் அடிக்கடி சென்று வருகிறார். அது நீலகிரி மாவட்டம். அங்குதான் 900 ஏக்கர் பரப்பில் கொட நாடு எஸ்டேட் உள்ளது. அங்கு அடிக்கடி சென்று ஓய்வெடுத்து விட்டு வருகிறார். அப்படிப்பட்ட ஜெயலலிதா, தன் சுயநலத்திற்காக தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை அடகு வைத்து விட்டார் ஜெயலலிதா.
 
இன்று உங்களுக்கு எல்லாம் தெரியும், கழக ஆட்சியில் தான் தொழிற்கல்விக்கு இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு மருத்துவக் கல்வி கற்க வேண்டிய மாணவர்கள் கதி கலங்கி நிற்கிறார்கள். மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இனி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், முதுநிலை மருத்துவப் படிப்பு போன்றவற்றிற்கு மாநில அரசு தேர்வு நடத்த முடியாது. ஆனால் 37 எம்.பி.க்களை வைத்துள்ள ஜெயலலிதா இதற்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. “கடிதம் எழுதிவிட்டால் என் கடமை முடிந்து விட்டது” என்று நினைக்கும் ஒரு முதல்வராக இருக்கிறார்.
 
மழைவெள்ளத்தில் இத்தொகுதி மக்களாகிய நீங்கள் தவித்த போது இங்கு வராத ஜெயலலிதா, பிறகு பல கட்சிகளின் தலைவர்களும் கேள்வி எழுப்பிய பிறகு இங்கு வந்தார். எப்படி என்றால் வேனில் வந்து, அதன் கண்ணாடியை கூட திறக்காமல், உள்ளே உட்கார்ந்த படி, “வாக்காள பெருமக்களே” என்று கூறியவர் ஜெயலலிதா.
 
காலில் தண்ணீர் படாமல் காரிலிருந்தவாரே மழை வெள்ளப் பாதிப்பு குறித்து ஒரு விஸிட் அடித்து விட்டு போய் விட்டார். இந்த தொகுதியில் இருந்த சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேலும் எதுவும் செய்யவில்லை. தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவும் எதுவும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.