’ஜெயலலிதாவிடம் போர்குணம் இல்லை’ - ஜெ. மீது ராமதாஸ் அட்டாக்
தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டுமானால் முதலமைச்சராக இருப்பவருக்கு போர்க்குணம் தேவை. ஆனால், முதல்வர் ஜெயலலிதாவிடம் எதுவும் கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய திமுக ஆட்சியிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, கலைஞர் எழுதும் கடிதங்களை அனுப்ப அவரது வீட்டிலேயே ஒரு அஞ்சல் நிலையத்தை அமைக்கலாம் என்று கிண்டல் செய்தார். ஆனால், அப்போது கலைஞர் செய்ததைத் தான் இப்போது இவர் செய்துகொண்டிருக்கிறார்.
தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டுமானால் முதலமைச்சராக இருப்பவருக்கு போர்க்குணம் தேவை. தமிழகத்தின் முக்கியக் கோரிக்கைகள் குறித்து பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் அடிக்கடி நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அதற்குப் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தயக்கம் காட்டினால் அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றும் தந்திரத்தை அறிந்திருக்க வேண்டும்.
ஆனால், முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்த குணங்கள் எதுவும் கிடையாது. மாறாக தம்மை சுற்றி வளைத்துள்ள சொத்துக் குவிப்பு உள்ளிட்ட ஊழல் வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டில் பிரதமர் மோடியும், அதற்கு முந்தைய ஆண்டில் நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் ஜெயலலிதாவை அவரது இல்லத்திற்கு வந்து சந்தித்துப் பேசினர். நாடாளுமன்றத்தில் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அதிமுகவின் ஆதரவை பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
அந்த நேரத்தில் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் அரசுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று ஜெயலலிதா நிபந்தனை விதித்திருந்தால் கோரிக்கைகள் நிறைவேறியிருக்கும். ஆனால், ஜெயலலிதாவோ தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்துவதை விடுத்து, சொத்து வழக்கிலிருந்து தம்மை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தான் ஜெயலலிதா.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரியக் கட்சியாக உருவெடுத்துவிட்டதாக பெருமை பேசும் அதிமுக, அதன் எம்.பி.க்கள் வலிமையை வைத்து இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதைவிடுத்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது, மனு கொடுப்பது, அதற்காக வெற்று பாராட்டு மாலைகளை தமக்குத் தாமே சூட்டிக் கொள்வது உள்ளிட்ட உத்திகள் மக்களை ஏமாற்றும் வித்தையாக பார்க்கப்படுமே தவிர ஒருபோதும் பயனளிக்காது.
இதை உணர்ந்து இனிவரும் நாட்களிலாவது ஆக்கப்பூர்வ அரசியல் செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.