செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:05 IST)

அடிபணிந்த ஓ.பி.எஸ்.. அடங்க மறுக்கும் மாணவர்கள்...

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வருவதாக கூறிய அவசர சட்டத்தை ஏற்க முடியாது என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.


 

 
டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை ஜல்லிக்கட்டு தொடர்பாக சந்தித்து பேசினார் முதல்வர் பன்னீர்செல்வம். அப்பொழுது ஜல்லிகட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அதே நேரம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என பிரதமர் கூறினார். 
 
இதனையடுத்து தமிழக அரசின் நடவடிக்கையை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள் என முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இதன் பின்னர் உடனடியாக தமிழகம் திரும்பாத முதல்வர் பன்னீர்செல்வம் மாநில அரசு அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழிகளை டெல்லியில் இருந்து ஆராய்ந்து இன்று அவசர சட்டம் குறித்து விளக்கம் அளித்தார். 
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க இருப்பதாகவும், அதற்கான நடைமுறைகள் சில இருப்பதால் இன்னும் சில தினங்களில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். எனவே மாணவர்கள், இளைஞர்கள் என போராட்டத்தை நடத்தும் அனைவரும் போராட்டத்தை கைவிட முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.
 
ஆனால், முதல்வரின் வேண்டுகோளை மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டிற்காக போராடிவரும் போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவரச சட்டத்தால் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு வருடம் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில், நிரந்தரமான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.