சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 10 டிசம்பர் 2016 (10:46 IST)

ரூ.138 கோடி பணம்; 157 கிலோ தங்கம் - அதிர்ச்சி கிளப்பும் சேகர் ரெட்டி

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் செய்து வரும் சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி பணம் மற்றும் தங்க நகைகள் சிக்கியுள்ளது.


 

 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினராகவும், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்வதியில் முன்னணியில் இருந்து வருபவர்தான் இந்த சேகர் ரெட்டி. மேலும், தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி நடத்துவற்கான உரிமம் பெற்றவர். அவர் பல முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
 
உளவுத்துறை அளித்த தகவலின் பேரில், இவரது வீடு மற்றும் அவருடைய உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் திடீர் சோதானை நடத்தினர். 
 
அதில், ரூ.106 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியது. அதில், ரூ.70 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 127 கிலோ தங்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


 

 
இதையடுத்து, நேற்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ரூ.32 கோடி பணம் மற்றும் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதன் மூலம் மொத்தமாக ரூ.138 கோடி பணமும், 157 கிலோ தங்கமும் சேகர் ரெட்டியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர வெவ்வேறு வங்கிகளில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது.


 

 
இவை அனைத்தும் தன்னுடையதுதான் என சேகர் ரெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். சமீபகாலமாக இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்படவில்லை. அவருக்கு எப்படி புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது சிபிஐ கைவசம் மாறியுள்ளது.