1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2023 (12:59 IST)

தமிழகத்தில் தொழில் துறை அழியும் அபாயம் ஏற்படும்: மின்கட்டண உயர்வு குறித்து சசிகலா..!

தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்துவதால் தமிழகத்தில் தொழில் துறை முற்றிலும் அழியும் அபாயம் ஏற்படும் என்றும், எனவே வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
திமுக தலைமையிலான அரசு வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயரும் என அறிவித்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இது தமிழக மக்களுக்கு செய்கின்ற மிகப் பெரிய துரோகமாகும். அதிலும் குறிப்பாக பத்து மாதங்களுக்கு முன்பாக மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது அதற்குள் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
 
தமிழ்நாட்டு மக்கள், இன்றைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளாலும், நிர்வாக சீர்கேடுகளாலும் ஏற்கனவே சிக்கித் தவித்து வரும் வேளையில், அவர்கள் தலையில் மென்மேலும் சுமையை ஏற்றுவது எந்தவிதத்தில் நியாயம்? என்பது தெரியவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் திமுக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், எத்தனையோ சிறு குறு வணிக நிறுவனங்கள் சமாளிக்க முடியாமல் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்துவதால் தமிழகத்தில் தொழில் துறை முற்றிலும் அழியும் அபாயம் ஏற்படும். மேலும், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் பொதுமக்களின் மீது மறைமுகமாக சுமையை இறக்கி அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.  
 
இன்றைக்கு தமிழ்நாட்டின் நிலைமை இவ்வாறு இருக்க, உள்நாட்டு வணிக நிறுவனங்களே தங்கள் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் தவிக்கும் சூழலில், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை கொண்டு வருவதாக திமுக ஆட்சியாளர்கள் சொல்வது நகைப்புக்குரிய செயலாகத்தான் பார்க்கமுடிகிறது.
 
எனவே, திமுகவினர் தமிழக மக்களின் நலனையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran