1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By அண்ணாகண்ணன்
Last Updated : வெள்ளி, 3 அக்டோபர் 2014 (20:44 IST)

தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மரணம்

தொழிலதிபரும் காந்திய அருளாளருமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் (91), இன்று சென்னையில் காலமானார். 
 
ஆண்டுதோறும் வள்ளலார் - மகாத்மா காந்தி விழாவை, சென்னை மயிலையில் உள்ள ஏவிஎம் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடத்துவது, அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் தொடர் தொண்டு. அதன்படி, இந்த ஆண்டும் நடந்தது. அதில், காந்தி ஜெயந்தியான அக்.2ஆம் நாளில், வள்ளலார் குறித்த உரையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவரது உயிர் பிரிந்தது. 
 
மறைந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம், 1923ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் தம் தந்தை நாச்சிமுத்துக் கவுண்டர் நகராட்சித் தலைவராக இருந்த காரணத்தினால் இவரும் அரசியலில் ஆரம்ப காலம் முதல் ஆர்வமாக இருந்தார்.
 
தமிழக சட்டப் பேரவை உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். 1952 முதல் 1967 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுக் காலம் அவர் சட்டப் பேரவை உறுப்பினராக சேவை புரிந்துள்ளார். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மற்றும் பல்வேறு சமுதாய மற்றும் விவசாய திட்டங்களை பொள்ளாச்சிக்குப் பெற்று தந்திருக்கிறார். 
 
இவர், சக்தி சுகர்ஸ், சக்தி பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைக் கொண்ட சக்தி குழுமத்தின் தலைவராக இருந்தார். குமரகுருபரர் மற்றும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் போன்ற கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்தார். மேலும் பல்வேறு ஆன்மிகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொறுப்பு வகித்தார். 
 
ஓம் சக்தி என்ற மாத இதழின் ஆசிரியராக விளங்கினார். பல புத்தகங்களை எழுதியுள்ளார். அத்துடன் ஏராளமான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். தமிழ் இசை இலக்கண நூலான பஞ்சமரபு, ஔவை துரைசாமிப் பிள்ளையின் திருவருட்பா உரை, பல்வேறு இலக்கியங்களின் மலிவுப் பதிப்பு உள்ளிட்டவற்றை வெளியிட உதவினார். எண்ணற்ற சமய, ஆன்மீக, சமூகப் பணிகளுக்கு நன்கொடையும் நல்லாதரவும் நல்கி வந்தார். 
 
இவருக்கு இந்திய அரசு, 2007இல் பத்ம பூஷன் விருது வழங்கிக் கௌரவித்தது. காஞ்சி சங்கராச்சாரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவை இவருக்குக் கவுரவ முனைவர் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன. மேலும் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர்.
 
மகாலிங்கம் என்ற பெயரிலேயே மகாத்மா காந்தியும் இராமலிங்க வள்ளலாரும் இணைந்துள்ளதாகக் கவிஞர்கள் இவரைப் புகழ்ந்துரைப்பர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளும் கர்ம வீரரின் நினைவு நாளுமான இன்று இயற்கை எய்தியதன் மூலம் மட்டுமின்றி, அவர்களின் கொள்கைகளில் பிடிப்புடன் இருந்து, அவற்றை வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் நிலைநாட்டியதன் மூலம் தாமும் அம்மாமனிதர்களின் வரிசையில் இணைந்துள்ளார். 
 
அருட்செல்வர் அவர்களின் இராமலிங்கர் பணிமன்றக் கவியரங்குகளில் நான் சில முறைகள் பங்கேற்றுள்ளேன். அப்போது கவிஞர்கள் அனைவரையும் தம் இல்லத்துக்கு அழைத்துச் சென்று விருந்தளித்தார். அவருடன் இணைந்து உணவருந்தியதும் பல்வேறு புத்தகங்களைப் பரிசாகப் பெற்றதும் நினைவில் அசைகின்றன. 

அருட்செல்வரின் மறைவுக்கு எனது தனிப்பட்ட முறையிலும் வெப்துனியா சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.