விஜய் கட்சி மாநாட்டின் உளவுத்துறை ரிப்போர்ட்.. மத்திய மாநில அரசின் கட்சிகள் கவலை..!
விஜய் கட்சியின் மாநாடு நடந்தே ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் தமிழக அரசியலில் அதன் தாக்கம் குறைய வில்லை என்றும், தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகளை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக மற்றும் திமுக, உளவுத்துறை ரிப்போர்ட்டுகளை வைத்து விஜய் கட்சிக்கு கிடைத்திருக்கும் ஆதரவை எண்ணி அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் கட்சியின் மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் முழுமையாக பங்கேற்றதாகவும், அதைவிட பல மடங்கு மக்கள் டிவி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மாநாட்டை பார்த்ததாகவும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, மாநாட்டில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் தங்கள் கட்சி வாக்குகளை விஜய் கட்சி பதம் பார்த்து விடும் வாய்ப்பு இருப்பதாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது.
அதே போல், விஜய் தனது உரையில் அதிமுகவை கொஞ்சம் கூட விமர்சனம் செய்யாமல் திமுகவை குறிவைத்தே பேசியதும் திமுக தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்திருப்பதாகவும், மாநாட்டுக்கு வந்த வாகனங்களின், பதிவு எண்களை வைத்து எந்தெந்த நகரங்களில் இருந்து கூட்டம் அதிகமாக வந்தது என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியை திமுக தொடங்க இருப்பதாகவும், அந்த பகுதிகளில் திமுக தனது கட்சி பணியை துரிதப்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், விஜய்யின் கட்சி மாநாடு, மத்திய மற்றும் மாநிலத்தில் ஆளும் கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
Edited by Mahendran