1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2017 (09:04 IST)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் கஷ்டம்தான்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் தற்போது அது கஷ்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.


 

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ப.சிதம்பரம் போன்ற வல்லுனர்கள் மக்களிடையே நேரிடையாக சென்று எடுத்துரைக்க வேண்டும். அவர் போன்ற பொருளாதார வல்லுனர்களை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால், இதைவிட ஒரு பெரிய வெற்றிடத்தை அவர் நிரப்பியிருக்க முடியும். அப்படி அவர் வந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் தற்போது அது கஷ்டம். அவரால் முடியாது என்று கூறவில்லை. தற்போதைய நிலையில் அது கஷ்டம் என்று தான் கூறுகிறேன்.

தி.மு.க. கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதே எங்கள் விருப்பம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதையெல்லாம் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.