1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (12:48 IST)

’அடக்குனா அடங்குற ஆளா நான்’ - சவால் விடும் கருணாநிதி

நான் தேர்தலில் ஏற்படுகிற வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படுகிறவன் அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
சென்னை தங்கச்சாலை மணிகூண்டு அருகில் ’தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
கூட்டத்தில் பேசிய கருணாநிதி, "நான் தேர்தலில் ஏற்படுகிற வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படுகிறவன் அல்ல. எத்தனையோ தேர்தல்களில் திமுக தோற்றிருக்கிறது. இதே தங்க சாலையில், அண்ணா போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போய் இருக்கிறது.
 
அதனால் அண்ணாவை இந்த உலகம் மறந்து விடவில்லை. அண்ணாவால் வளர்க்கப்பட்ட நாங்கள் தான் உங்களை எல்லாம் பல்லாயிரக்கணக்கில் பெற்றிருக்கிறோம். இத்தகைய தொண்டர்களை பெற்றுள்ள திமுகவிற்கு எந்த நேரத்திலும் சஞ்சலம் இல்லை. சலசலப்பு இல்லை. திமுக என்றும் அஞ்சியதில்லை.
 
காவல்துறையின் கண்டிப்பிற்கு ஆளும் கட்சியினுடைய அறைகூவலுக்கும் திமுக என்றைக்கும் பயந்து ஓதுங்கியதில்லை. அவைகளை எல்லாம் எண்ணித்தான் இத்தனை ஆண்டு காலம் இந்த இயக்கம் வளர்ந்து இருக்கிறது. இன்னும் வளரக்கூடிய கட்சி தான் திமுக யாரும் சந்தேகப்பட தேவையில்லை.
 
சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுகிற சமயத்தில் தமிழ்நாட்டில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்திகள் வந்தது. நாம் தான் ஜெயிக்கிறோம் உங்களுடைய நடவடிக்கைகளை செய்யுங்கள் என்று எழுதியிருந்தது.
 
அந்த செய்தியை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் திமுகவை வீழ்த்துவதற்கான சூழ்ச்சிகள் பின்னப்பட்டதா? நம்மை ஏமாற்றி, தோற்கடிக்க யார்? யார்? புல்லுருவிகளாக இருந்தார்கள். யார்? யார்? அதற்கு துணை போனார்கள் என்பதை எல்லாம் நான் அறிவேன்.
 
அவர்களுக்கு தகுந்த தண்டனையை எதிர்காலத்திலே ஜனநாயகம் தீர்ப்பாக வழங்கும். அந்த ஜனநாயகம் இங்கு மறுபடியும் மறுமலர்ச்சி பெற்று தமிழகத்தை தமிழன் மீண்டும் ஆளுவான் என்ற நம்பிக்கையை நோக்கி நாம் தொடர்ந்து பயணம் செய்வோம்" என்று கூறியுள்ளார்.