1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 25 ஜூன் 2016 (18:31 IST)

இளைஞர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்தால் கூலிப்படையினரை தடுக்கலாம்! - ராமதாஸ் ஐடியா

இளைஞர்களுக்கு சில வசதிகளை செய்து தருவதன் மூலம் புதிய குற்றவாளிகளும், கூலிப்படையினரும் உருவாவதை மிகவும் எளிதாக தடுத்து விடலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டம், ஒழுங்கு நிலை மனநிறைவளிப்பதாக இல்லை.
 
தலைநககர் சென்னையில் கடந்த 3 வாரங்களில் 4 வழக்கறிஞர்கள் படுகொலை, ஒரே நாளில் 6 பெண்கள் கொலை என குற்றங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2000 படுகொலைகள் நடந்திருப்பதாக காவல்துறை கூறியுள்ள நிலையில் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகிறது.
 
ஆனால், கொலை, கொள்ளைகள் அதிகரித்திருப்பதன் அபாயத்தை தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து வருவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். அதேபோல், தமிழகத்தில் கூலிப்படைகளின் அட்டகாசம் பெருகிவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
 
கூலிப்படையினருக்கு ரூ.15,000 கொடுத்தால் போதும்... அவர்கள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்வார்கள் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பல நேரங்களில் சில பாட்டில் மதுவுக்காக கூலிப்படையினர் களமிறங்கி கொலைகளை செய்ததும் தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில் முன்விரோதம், குடும்பத் தகராறு, காதல் உள்ளிட்ட காரணங்களால் படுகொலைகள் நடக்கின்றன...
 
இவற்றை காவல்துறையினரால் தடுக்க முடியாது. இதற்காக தமிழக அரசையோ, காவல்துறையையோ குறை கூறக்கூடாது என ஜெயலலிதா கூறியிருக்கிறார். முதல்வரின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். அதேநேரத்தில் அந்த ஒரு காரணத்தை மட்டும் கூறி, இந்த விவகாரத்தை அடியோடு நிராகரிப்பது ஆபத்திற்கு வழி வகுக்கும்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிடும் முன்விரோதம், குடும்பத் தகராறு, காதல், பகை உள்ளிட்டவை தமிழகத்தில் காலங்காலமாக இருந்து வருகின்றன. ஆனால், இக்காரணங்களுக்காக கடந்த காலத்தில் மோதல்கள் நடந்திருக்குமே தவிர, கொலைகள் நடந்ததில்லை.
 
ஆனால், இப்போது சிறிய பகைக்குகூட எதிரியை கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமானதற்கு கூலிப்படை கலாச்சாரம் பெருகியதும், குறைந்த தொகைக்குக் கூட கொலை செய்ய கூலிப்படைகள் தயாராக இருப்பதும் தான் காரணம். கூலிப்படைக் கலாச்சாரம் உடனடியாக ஒழிக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் கொலைகள் எனப்படுபவை பொழுதுபோக்குக்காக செய்யக்கூடியவை எனும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்.  கூலிப்படை உருவாவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை தடுக்க வேண்டியது அவசியமாகும்.
 
கூலிப்படைகளில் இடம் பெறுவோரில் பெரும்பான்மையினர் படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள். சாகசங்களை செய்யத் துடிக்கும் வயதில் உள்ள இளைஞர்களின் துடிப்பைப் பயன்படுத்திக் கொண்டு  அவர்களை சமூகவிரோத சக்திகள் தவறான செயல்களில் ஈடுபடுத்தி வாழ்க்கையை சீரழிக்கின்றனர். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பது அவர்களை வளைக்க நினைக்கும் சக்திகளுக்கு மிகவும் எளிதாகிவிட்டது.
 
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு திறன் சார் கல்வி தொழிற்கல்வி ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலம் இளைஞர்கள் தவறான பாதையில் பயணம் செய்வதை தடுத்து நிறுத்தலாம். இது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணியாகும்.
 
இளைஞர்கள் தவறான வழிகளில் செல்லாமல் தடுக்கும் பெரும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. கடந்த காலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அவர்கள் தண்டனை முடிந்து வெளியில் வந்தாலும் அவர்களின் செயல்பாடுகளை காவல்துறையினர் இரகசியமாக  கண்காணிப்பார்கள்.
 
இதன்மூலம் அவர்களின் குற்றச்சதித் திட்டங்களை முன்கூட்டியே கண்டுபிடித்து முறியடிப்பது தான் இக்கண்காணிப்பின் நோக்கமாகும். ஆனால், அந்த வழக்கம் இப்போது ஒழிந்துவிட்டது. இப்போது கூலிப்படை உதவியுடன் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை கண்காணிப்பது இல்லை. மாறாக அவர்களின் தவறுகளுக்கு துணையாக உள்ளனர். 
 
இதனால் குற்றங்களில் ஈடுபடுவோர் மிகவும் எளிதாக இளைஞர்களை கவர்ந்து கூலிப்படை உள்ளிட்ட தவறான வழிகளில் ஈடுபடுத்துகின்றனர். பதின்வயதில் இளைஞர்களின் கனவாக இருக்கும் சில விஷயங்களை கூலிப்படை நடத்துபவர்கள் நனவாக்குவதால் அதில் மயங்கும் இளைஞர்கள் எந்த குற்றத்தையும் செய்ய தயார் நிலைக்கு மாறுகின்றனர்.
 
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்தால் அவர்களின் வலையில் வீழும் இளைஞர்களை அடையாளம் கண்டு தடுக்க முடியும். இதற்கேற்றவாறு காவல்துறையின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகும்.
 
அடுத்ததாக சிறைத்துறை சீர்த்திருத்தங்கள் மிகவும் முக்கியமானவையாகும். தமிழக சிறைச்சாலைகள் குற்றவாளிகளை திருத்துவதற்கு பதிலாக, அவர்களை பெருங்குற்றவாளிகள் ஆக்கும் மையங்களாக மாறி வருகின்றன. இது மிகவும் ஆபத்தான போக்கு. சிறையில் தண்டனை அனுபவித்துவரும் சில பெரும் போக்கிரிகள், உணர்ச்சி வேகத்தில் சிறிய தவறுகளை செய்துவிட்டு சிறைக்கு வரும் இளைஞர்களுக்கு சில வசதிகளை செய்து தருவதன் மூலம் தங்களின் பிடிக்குள் கொண்டு வருகின்றனர். இதைத் தடுப்பதன் மூலம் புதிய குற்றவாளிகளும், கூலிப்படையினரும் உருவாவதை மிகவும் எளிதாக தடுத்து விடலாம்.
 
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் அரசு ஏராளமான உதவிகளை செய்யும் அதேநேரத்தில், அவர்களைச் சுற்றி அவர்களுக்கே தெரியாமல் கண்காணிப்பு வளையத்தை போட்டு கண்காணிக்கிறது. இதனால் அந்நாடுகளிலுள்ள இளைஞர்கள் தவறான வழிகளில் செல்வது தடுக்கப்படுகிறது. நல்ல விஷயங்களுக்காக இத்தகைய கண்காணிப்பை மேற்கொள்வதில் தவறு இல்லை.
 
எனவே, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பது போன்ற ஏற்பாட்டை தமிழகத்திலும் செய்யலாம். இதற்கெல்லாம் மேலாக அனைத்து குற்றங்கள் மற்றும் சீரழிவுகளுக்கு காரணமாக இருப்பது மதுவும், போதைப் பொருட்களும் ஆகும். கல்வி நிறுவனங்களில் கட்டுப்பாடின்றி போதைப்பொருட்கள் விற்கப்படுவது குறித்து சில நாட்களுக்கு முன் நான் வெளியிட்ட அறிக்கையில் விரிவாக விளக்கியிருந்ததுடன், அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு இன்று வரை மேற்கொள்ளவில்லை.
 
இந்தியாவின் எதிர்காலத் தூண்களை பாதுகாத்து, கூலிப்படைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டியது நமது முதன்மைக் கடமையாகும். எனவே, இளைஞர்களுக்கு தரமான கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குதல், தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாக்குதல், காவல்துறை மற்றும் சிறைத்துறைகளில் சீர்திருத்தம் செய்தல், மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும்  ஒழித்தல் ஆகியவற்றின் மூலம் கூலிப்படையற்ற தமிழகத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்