திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (09:46 IST)

கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல..! – காதல் ஜோடியை வெட்டிக் கொன்ற தந்தை!

எட்டயபுரம் அருகே திருமணமான காதல் ஜோடியை பெண்ணின் தந்தை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி எட்டயபுரம் அருகே வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஷ்மா கோவில்பட்டி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ரேஷ்மாவுக்கும், எதிர் வீட்டில் இருந்த உறவினர் மகன் மாணிக்கராஜூக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் உறவினர்கள் என்றாலும் மாணிக்கராஜ் கூலிவேலை செய்பவர் என்பதால் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவித்த முத்துக்குட்டி, ரேஷ்மாவுக்கு வேறு மாப்பிள்ளையுடன் நிச்சயம் செய்துள்ளார்.

இதனால் ரேஷ்மாவும், மாணிக்கராஜும் வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் திருமணம் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்துள்ளனர். பின்னர் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு திரும்பியுள்ளனர். அங்கு இருவரும் மாணிக்கராஜின் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளனர்.

மாணிக்கராஜ் தாய், தந்தையர் வெளியே சென்ற பிறகு மாணிக்கராஜும், ரேஷ்மாவும் மட்டும் வீட்டில் இருந்தபோது அங்கு அரிவாளோடு வந்த முத்துக்குட்டி தனது மகள், மாப்பிள்ளை இருவரையுமே வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான முத்துக்குட்டியை தேடி வருகின்றனர்.