தமிழகத்தின் பல மாவட்டங்களில் நள்ளிரவில் கனமழை: பள்ளிகள் விடுமுறை..!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்து உள்ளதை அடுத்து, இன்று இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக, நேற்று நள்ளிரவு கோவை, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியதாகவும், கடந்த 21 மணி நேரத்தில் கோவையில் மட்டும் 9 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 6 சென்டிமீட்டர் மழையும், திருப்பூரில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக, கோவை காரமடை அருகே ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இரண்டு கார்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், ஆனால் அதில் பயணம் செய்தவர்கள் உயிர்தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Edited by Siva