1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (12:30 IST)

ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு; கொடி இன்று மாலை அறிமுகம்!

ஜெயலலிதா மறைவை அடுத்து, அதிமுக மூன்று அணிகளாகப் பிரிந்து, சசிகலா தலைமையிலும், பன்னீர்செல்வம்  தலைமையிலும், தீபா தலைமையிலும் அதிமுக உருவாகியுள்ளது. மூன்று அணிகளிலும் உள்ள அதிமுகவினர், இன்று  ஜெயலலிதா பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

 
தீபா, தனது வீட்டின் ஒரு பகுதியை கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளார். இந்த புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை 6  மணிக்கு நடந்தது. வைதீக முறைப்படி பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, புதிய கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி  தீபா திறந்து வைத்தார். பிறகு அலுவலகத்துக்குள் அவர் சென்று குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
 
அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தீபா சென்றார். அங்கு ஜெயலலிதா சமாதியின் மேல்  மலர்களைத் தூவி மரியாதைசெலுத்தினார்.
 
பிறகு மதுரவாயலில் உள்ள குழந்தைகள் காப்பகம் சென்று, அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார்.  மதியம் 12 மணிக்கு, தனது வீடு முன்பு அன்னதானத்தைத் தொடங்கிவைக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு ‘ஜெ.தீபா பேரவை’ என்ற அமைப்பை அதிகாரப்பூர்வமாக முறைப்படி அறிவிக்க இருக்கிறார். இந்த புதிய அமைப்பின் மாநில நிர்வாகிகள்  பட்டியலையும் அப்போது தீபா வெளியிட உள்ளார்.
 
பேரவையின் புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைக்க உள்ளார். இந்த கொடி அதிமுகவின் கருப்பு, சிவப்பு, வெள்ளை வண்ணத்தில் நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும் என்று  கூறப்படுகிறது.