அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு முதல்பரிசில் ஆள்மாறாட்டம் – இளைஞரின் புகாரால் அதிர்ச்சி!
அலங்காநல்லூரில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல்பரிசு பெற்றுள்ளதாக இரண்டாம் பரிசு பெற்ற இளைஞர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இந்த போட்டியில் 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து என்ற பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது . இதனை அடுத்து 9 காளைகளை அடக்கிய கருப்பண்ணன் என்பவர் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றார். 8 காளைகளை அடக்கிய சக்தி என்பவருக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் என்பவர் முதல் பரிசு பெற்றவர் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதில் முதல் சுற்றின்போது 33 வது பனியன் எண் கொண்ட ஹரிகிருஷ்ணன் என்பவர் 3 காளைகளை அடக்கிய பிறகு காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் முன்பதிவு செய்யாத கண்ணன் அதே டிஷர்ட்டை போட்டுக்கொண்டு களத்தில் இறங்கி 9 காளைகளைப் பிடித்து ஆள்மாறாட்டம் செய்துள்ளார். இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முதலிடம் பிடித்த தமக்கே முதல்பரிசு வழங்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.