1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2024 (11:08 IST)

மல்லிகைப்பூ விலை திடீர் உயர்வு.. ஒரு கிலோ ரூ.3000 என தகவல்..!

Flowers
சென்னை கோயம்பேடு பூக்கள் சந்தையில் அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் கோயம்பேடு மலர் சந்தைக்கு தினந்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
 
இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு மலர் சந்தையில் அனைத்து வகை பூக்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.
 
சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.1800க்கு விற்பனையான மல்லிகை பூ, தற்போது ரூ.3000க்கு விற்பனை ஆகி வருவதாகவும், அதேபோல் ரூ.600க்கு விற்பனையான கனகாம்பரம், ரூ.800க்கு விற்பனை ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ஒரு கிலோ ஜாதி மல்லி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.500க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.750க்கு விற்பனை ஆகி வருவதாகவும், ஐஸ் மல்லி விலை ரூ.2000 எனவும் கூறப்படுகிறது.
 
அதேபோல், முல்லை, சாமந்தி, பன்னீர் ரோஜா, சாக்லேட் ரோஜா, தாழம்பூ உள்ளிட்ட பூக்களும் விலை உயர்ந்துள்ளதாக தெரிகிறது. புத்தாண்டு முன்னிட்டு, கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக பூக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
Edited by Mahendran