காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை!

Last Modified திங்கள், 10 ஜூன் 2019 (16:30 IST)
ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகள் தன்னுடைய பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டதால் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார்.
ஆம்பூர் பகுதியில் உள்ள குப்பராஜபாளையம் என்ற பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சரவணன் தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த சரவணனின் மகள், வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் தனது மகள் இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.
மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் கோபத்தில் சரவணன் இவ்வாறு கூறுவதாகவும், ஓரிரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்றும் அக்கம் பக்கத்தினர் நினைத்தனர். ஆனால் மகள் திருமணம் செய்த அன்று மாலையே தனது மகள் இறந்துவிட்டதாகவும், அன்றைய தினம் மாலை அவருடைய இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் போஸ்டர் அடித்து அந்த பகுதி முழுவதும் சரவணன் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டரை கண்ட அப்பகுதி மக்களும், உறவினர்களும், மகள் உயிரோடு இருக்கும்போதே இப்படி ஒரு போஸ்டர் அடித்து தந்தையே ஓட்டியுள்ளாரே? என அதிர்ச்சி அடைந்ததுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :