1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : திங்கள், 30 ஜூன் 2014 (22:05 IST)

துரித வளர்ச்சியில் ஸ்ரீரங்கம்; அடுக்கடுக்கான நலத் திட்டங்கள் - ஜெயலலிதா விழாப் பேருரை

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 30.6.2014 அன்று நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேருரை ஆற்றினார். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழக முதல்வரின் முழுமையான உரை இங்கே:
 
காவேரிக்கும், கொள்ளிடத்திற்கும் நடுவே அமைந்துள்ளதும்; ஏழுலகங்கள் என்று பக்தர்களால் நம்பப்படும் ஏழு சுற்று மதில் சுவர்களின் நடுவில் அமைந்துள்ளதுமான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த இனிய அரசு விழாவிலே பங்கேற்று, ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்காக 193 கோடியே, 14 லட்சத்து, 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் திறந்து வைத்தல்; 171 கோடியே, 27 லட்சத்து, 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்; பல்வேறு துறைகளின் சார்பாக 63 கோடியே, 49 லட்சத்து, 49 ஆயிரம் ரூபாய் செலவில் நலத் திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்குதல் என 427 கோடியே 91 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை அளிக்கவும், உங்களை எல்லாம் கண்டு உங்களிடம் மீண்டும் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கிடைத்துள்ள வாய்ப்பு குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

 
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், மானிய விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், கட்டணமில்லாக் கல்வி வழங்கும் திட்டம், விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் உழவர் பாதுகாப்புத் திட்டம், ஏழை எளிய மக்கள் உயர் சிகிச்சை பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் அம்மா உணவகங்கள், அரசுப் பேருந்துகளில் பயணிப்போருக்கு குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்கும் அம்மா குடிநீர்த் திட்டம், அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள், சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையாக விளங்கும் காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை உச்ச நீதிமன்றம் மூலம் போராடி மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து தமிழக மக்களின் உரிமையை நான் நிலைநாட்டியுள்ளேன். இதனைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஏதுவாக, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையைப் பொறுத்த வரையில், எனது உத்தரவின் பேரில் தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்களையடுத்து, தமிழகத்திற்கு உரிய நியாயமான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினால் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தும் வகையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் மூன்று பேர் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். 
 
தமிழ்நாடு மற்றும் கேரளா சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையும் மத்திய நீர்வளக் குழுமம் சார்பில் அதன் பிரதிநிதியை நியமிக்க முடிவு செய்துள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன், அணையின் நீர் மட்டத்தை முதற் கட்டமாக 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 
 
எனது மூன்று ஆண்டு கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முன்னிறுத்தியும், செய்யப் போகும் சாதனைகளை எடுத்துக் கூறியும் மக்களவைத் தேர்தலில் நான் உங்களிடம் வாக்கு சேகரித்தேன். ஆனால், எதிரணியினரோ பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். என்னை வசை பாடினர். என் மீதும், எனது அரசின் மீதும் புழுதி வாரி இறைத்தனர். இறுதியில் எனக்கும், மக்களாகிய உங்களுக்கும் இடையே உள்ள அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவை எதிரணியினரை மண்ணைக் கவ்வச் செய்தன.

நான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு முறை இங்கு வந்து திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், நலத் திட்ட உதவிகளை வழங்கியும் உங்கள் முன் உரையாற்றி உள்ளேன். தற்போது ஐந்தாவது முறையாக இன்று உங்கள் முன் உரையாற்றிக்கொண்டு இருக்கிறேன். 
 
உங்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான், முதன் முதலாக 19.6.2011 அன்று இங்கு வந்தேன். அப்போது, 190 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன். 
 
இரண்டாவது முறையாக 13.2.2012 அன்று நான் வந்த போது, 160 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும், மூன்றாவது முறையாக 13.9.2012 அன்று நான் இங்கு வந்த போது 82 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும், 3.6.2013 அன்று நான்காவது முறையாக நான் வந்த போது 1,752 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும், என மொத்தம் 2,185 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5,200 திட்டங்களுக்கு நான் அடிக்கல் நாட்டியுள்ளேன். 
 
உங்களின் பயன்பாட்டிற்காக என்னால் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ள திட்டங்களில் முக்கியமானவற்றைப் பட்டியலிட விரும்புகிறேன். 
 
தோட்டக் கலை வல்லுநர்களின் எதிர்காலத் தேவையினைக் கருத்தில் கொண்டு மகளிருக்காகவே தோட்டக் கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒன்று, மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் 40 மாணவிகள் சேர்க்கப்பட்டுப் பயின்று வருகின்றனர். 
 
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அதி நவீன பரிசோதனை மையம், , Infusion Pump, Monitor, Artery Blood Gas Analyser, Anesthesia Work Station ஆகிய நவீன மருத்துவ உபகரணங்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு அறைகள், பிரசவ வார்டு, பேறு கால நிலையம், அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

ஸ்ரீரங்கம் மற்றும் பெட்டவாய்த்தலை துணை மின் நிலையங்கள் 14 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன. 
 
அதவத்தூர் மற்றும் முத்தப்புடையான் பட்டியில் 3 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் 6 கிடங்குகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அந்தநல்லூர் மற்றும் நாகமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமரசம் பேட்டையில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையமும், மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட மரவனூர் கிராமத்தில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளன. மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 
30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய சட்டப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 100 மாணவ மாணவியர் சேர்க்கையுடன் துவங்கப்பட்ட இந்தத் தேசிய சட்டப் பள்ளியில் நடப்பு ஆண்டில் 200 மாணவ, மாணவியரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதரைத் தரிசிப்பதற்காக அம்மா மண்டபம் படித் துறையில் நீராடி, ராஜ கோபுரம் வரை பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, மழை மற்றும் வெயில் காலங்களில் ஏற்படும் சிரமத்தை நீக்கும் வகையில் மேற் கூரையுடனான நடைபாதை ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
 
ஸ்ரீரங்கம் வட்டம், சேதுராப்பட்டி கிராமத்தில் 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம், 60 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அரசு பொறியியல் கல்லூரி, 13 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றிற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்படி கல்லூரிகள் தற்போது தற்காலிகக் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நவலூர்குட்டப்பட்டு என்ற இடத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1,505 மாணவ, மாணவியர் பயன் அடைந்து வருகின்றனர். நடப்பாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. 
 
பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒரு நாளைக்குத் தோராயமாக 2,500 பக்தர்கள் பயன் அடைந்து வருகின்றனர். 
 
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் வசதிக்காகவும், வளர்ச்சிக்காகவும், 35 புதிய பேருந்து வழித் தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
 
இவை போன்ற ஏராளமான திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுக் காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தவிர, கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு மட்டும் 453 கோடியே 40 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
சீரோடும், சிறப்போடும் நடைபெற்று வரும் இந்த வண்ணமிகு விழாவில், ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் பயனடையும் வண்ணம் 193 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,123 முடிவுற்ற பணிகளை இன்று திறந்து வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். 
 
கொள்ளிடக் கரையில், பஞ்சக் கரை சாலை அருகே 6 ஏக்கர் 40 சென்ட் நிலப் பரப்பில் 47 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சுமார் 1,000 யாத்திரிகர்கள் தங்கும் வகையிலான விடுதியினை நான் இன்று திறந்து வைத்துள்ளேன். இந்த விடுதியில், டார்மிட்டரி, குடும்பத்துடன் தங்கும் தனி அறைகள், உணவு விடுதி, பாதுகாப்புப் பெட்டகம், குளியல் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல், திருவானைக்காவல் மற்றும் சமயபுரம் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களும் பயன் அடைவார்கள். 
 
மழை நீரைச் சேமிக்கும் பொருட்டும், மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரைத் தடுத்து சேமிக்கும் வகையிலும், 32 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட முத்தரச நல்லூர் அருகே கம்பரசம் பேட்டையில் காவேரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையினை இன்று நான் திறந்து வைத்துள்ளேன். இதன் மூலம் ஸ்ரீரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். 
 
46 கோடியே 35 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் பணிகள், தெரு விளக்குகள், தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள், பாலங்கள் அமைத்தல், தடுப்புச் சுவர், கழிவறைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று நான் திறந்து வைத்துள்ளேன்.

திருச்செந்துறையில் 4 கோடி ரூபாய் செலவில் குளிர் பதன வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் இன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில், 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதன அறை, வாழைத் தார்களை கழுவி, தரம் பிரித்து, சிப்பம் கட்டும் வசதி, பரிவர்த்தனைக் கூடம்; வணிகர்களுக்கான கடைகள், சாலை, சுகாதார வசதியுடன் கூடிய பொது கட்டமைப்பு, தடையில்லா மின்சாரம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், வாழை விவசாயிகளும், நுகர்வோரும் பெரிதும் பயனடைவர். 
 
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் CT Scan, இரண்டு டயாலிசிஸ் யூனிட்டுகள், நான்கு வெண்டிலேட்டர்கள், Auto Analyser with ELISA reader, C-Arm, Eye Operating Microscope போன்ற அதி நவீன மருத்துவ உபகரணங்கள் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டு, இன்று என்னால் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 38 லட்சம் ரூபாய் செலவில் பெட்டவாய்த்தலையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 81 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு இன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 
 
இதே போன்று, 23 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் திருவானைக்காவல் கோயில் பகுதியில் 110/11 கி.வோ. புதிய துணை மின் நிலையம்; 7 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் மகளிர் தோட்டக் கலை கல்லூரி அலுவலகக் கட்டடம்; 6 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்; திருச்சிராப்பள்ளி - குழுமணி குடமுருட்டி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம்; 2 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் பூங்குடி மற்றும் எட்டரை அரசு மேல்நிலை பள்ளிகளில் புதிய கட்டடங்கள்; 45 லட்சம் ரூபாய் செலவில் உத்தமர் சீலி மற்றும் திருப்பாய்த் துறையில் கால்நடை மருந்தகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 
 
இந்த இனிய விழாவில் 171 கோடியே 27 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,655 பணிகளுக்கு இன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன் என்பதைப் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவற்றில் முக்கியமான ஒரு சில பணிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

திருச்சிராப்பள்ளி மாநகரின் மையப் பகுதியில் அமைந்து உள்ள மகாத்மா காந்தி பூ, காய்கனிகள் மார்க்கெட் பகுதியில், நிலவும் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கம் தொகுதி, கள்ளிக்குடி கிராமத்தில் 9.79 ஏக்கர் நிலப்பரப்பில் 77 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் காய்கனிகள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் அமைக்க இன்று நான் அடிக்கல் நாட்டி உள்ளேன். இங்கு 1,000 கடைகள், 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, தரம் பிரித்து வகைப்படுத்தும் களம், தரம் பிரித்து சிப்பமிடும் கருவி, அகலமான உட்புற சாலைகள் போன்ற 
நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
 
அந்தநல்லூர், மணிகண்டம் மற்றும் மணப்பாறை ஒன்றியங்களுக்கு உட்பட்ட 212 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் 48 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன். இத்திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் பயனடைவர். இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 6.80 மில்லியன் லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 
 
இதே போன்று, 13 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் 666 சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்; 2 கோடியே 56 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் “தாய்” திட்டத்தின் கீழ் குடிநீர்ப் பணிகள்; தெரு விளக்குகள் அமைத்தல், சிமெண்ட் சாலை மற்றும் தார்ச் சாலை பணிகள்; தடுப்புச் சுவர் மற்றும் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்; 4 கோடியே 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் 341 தொகுப்பு வீடுகள்; 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள்; 12 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் ஸ்ரீரங்கம் குறுவட்ட நில அளவர் குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டடம்;

66 லட்சம் ரூபாய் செலவில் மறவனூர், ராம்ஜி நகர், வியாழன் மேடு ஆகிய கிராமங்களில் கால்நடை மருத்துவக் கட்டடங்கள்; 23 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் மணப்பாறை வட்டம், கண்ணுடையான் பட்டி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டடம் மற்றும் ஆய்வகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நான் அடிக்கல் நாட்டியுள்ளேன் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இது தவிர 63 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 25,875 பயனாளிகளுக்கு இன்று நான் வழங்க உள்ளேன். 
 
அத்தனை பயனாளிகளுக்கும் நானே உதவிகளை வழங்க வேண்டும் என்ற விருப்பம் என் மனத்தில் இருந்தாலும், நேரத்தின் அருமை கருதி ஒரு சிலருக்கு மட்டும் நலத் திட்ட உதவிகளை இந்த மேடையில் வழங்க உள்ளேன். 
 
நான் மேடையில் உதவிகளை வழங்கிய பின்பு இன்றே அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நலத்திட்ட உதவிகளை மற்ற பயனாளிகளுக்கு வழங்குவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
தமிழர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் தமிழகத்தை அழைத்துச் செல்ல உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீங்கள் முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 
 
இந்த விழா சீரோடும், சிறப்போடும் அமைந்திட திட்டமிட்டு பணியாற்றிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், அனைத்துத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை காண வேண்டும், எனது உரையை கேட்க வேண்டும் என்ற அவாவில் பெருந்திரளாக இங்கே குழுமியுள்ள உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக்கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க ! என்று கூறி, விடை பெறுகிறேன். 
 
இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.