1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 27 மே 2017 (17:22 IST)

ராம் மோகன் ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி!

ராம் மோகன் ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி!

முன்னாள் தலைமைச் செயலாளரும், தொழில் முனைவோர் வளர்ச்சி கழகத்தின் இயக்குநருமான ராம் மோகன் ராவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


 
 
கடந்த வருடம் டிசம்பரில் ஜெயலலிதா இறந்த சில தினங்கலுக்கு பின்னர் ராம் மோகன ராவ் வீட்டில் துணை ராணுவத்தின் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் விசாரணை நடைபெற உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டளிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அப்போது தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவின் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. உச்சக்கட்டமாக தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலக அறையிலும் சோதனை நடத்தப்பட்டது.
 
இந்தச் சோதனையின் முடிவில் ராம் மோகன் ராவின் வீட்டில் இருந்து சொத்து மற்றும் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்களை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் ராம் மோகன் ராமின் தலைமைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
 
இதையடுத்து ராம் மோகன் ராவிற்கு மீண்டும் தொழில் முனைவோர் வளர்ச்சி கழகத்தின் இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. அதன் பின்னர் அந்த வழக்கு கிடப்பில் இருந்தது. இந்நிலையில் ராம் மோகன் ராவிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 
வருமானவரித்துறை சோதனையின் அடிப்படையில் பணபரிமாற்றம் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொள்கிறது. சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ராமமோகன ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாகவும், இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.