1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (10:41 IST)

கோயம்பேடு சந்தையில் ஒரு முருங்கைக்காய் 50 ரூபாய்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Drumstick
கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு, இரண்டு முருங்கைக்காய் 10 ரூபாய் என மார்க்கெட்டில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று ஒரே ஒரு முருங்கைக்காய் 50 முதல் 55 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கு மொத்த விலையாக விற்பனையாகி வருவதாகவும், சில்லறை விலையாக ஒரு முருங்கைக்காய் 50 முதல் 55 ரூபாய் வரை விற்பனையாகி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முருங்கைக்காய் பொதுவாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் அதிகம் விளையும் என்றும், அங்கிருந்து வரும் முருங்கைக்காய்கள் தான் விற்பனையாகி வருவதாகவும், தற்போது முருங்கைக்காய் சீசன் முடிந்ததால் குறைவாக முருங்கைக்காய் கிடைப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் வரவழைக்கப்பட்டு வருவதாகவும், அங்கேயே ஒரு கிலோ 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்து வரும் போக்குவரத்து செலவுகள் சேர்த்தால் 400 ரூபாய்க்கும் மேலாக விலை நிர்ணயிக்க வேண்டி இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஒரு கிலோ 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காய், இன்று ஒரே நாளில் நூறு ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran