1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (20:51 IST)

ரூ.60 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்.! ஆன்லைனில் விற்பனை செய்தவர் கைது.!

Arrest
ஆன்லைன் செயலி மூலம் விற்பனை செய்யப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாதிரிகளை  பறிமுதல் செய்து,  ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
 
கோவையில் கல்லூரி  மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை படுஜோராக நடைபெற்று வந்தது. இதுகுறித்து புகார்கள் வரவே, விசாரணை நடத்திய கோவை மாநகர போலீசார், குனியமுத்தூர் மற்றும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களை  கைது செய்தனர். 
 
அவர்கள் பெங்களூரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்குவது விசாரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இதில் இந்தியா மார்ட் என்ற செயலி மூலம், போதை மாத்திரை விற்பனை பகிரங்கமாக நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை சைபர் கிரைம் காவல் துறையின் உதவியுடன், செயலியில் வியாபார தொடர்பு வைத்து இருந்த நபர் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த துளிப் பயோ டெக் ஃபார்மா என்ற நிறுவன உரிமையாளர் சச்சின் கார்க் என்ற நபர், போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
Kovai Commisioner
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அரியானா மாநிலம் விரைந்து சென்று, சச்சின் கார்கை கைது செய்து, அவரிடம் இருந்த 20,000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 60 லட்ச ரூபாய் இருக்கும் என  கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் வரை கோவை மாநகரில் 158 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், 2,598 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 19 குண்டாஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார்.