செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (10:57 IST)

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியத்தை மறுப்பது சமூக அநீதி: டாக்டர் ராமதாஸ்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியத்தை மறுப்பது சமூக அநீதி எனவும், 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக பணியமர்த்தப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக  பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மே மாதம்  ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை  அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் ரூ.10,000 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருபவர்கள். அந்த ஊதியத்தை வைத்துக் கொண்டு அந்தந்த மாத செலவுகளை சமாளிக்க முடியாது எனும் போது, ஆண்டுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?
 
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைத்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று பல முறை உறுதியளித்தும் கூட,  அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. பல ஆண்டுகளாக தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இந்த ஆண்டாவது தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த மாதம் சென்னையில்  அவர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அப்போது அவரது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்ததால் தங்களின் கனவுகள் நனவாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தான், மே  மாத ஊதியம் என்ற குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட ஏற்க அரசு மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல.
 
பகுதிநேர ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணி செய்து தங்களின் வாழ்க்கையை தொலைத்தவர்கள். பணியமர்த்தப்படும் போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறி விட்டது.பகுதி நேர சிறப்பாசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது; அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம்; ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான் அவர்கள் இப்பணியில் சேர்ந்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்களுக்கு இப்போது ரூ.40,000 ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவதால் ரூ.10,000 மட்டுமே கிடைக்கிறது. இது அவர்களுக்கு போதுமானது அல்ல.
 
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்நிலையையும், அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். முதல்கட்டமாக,  அவர்களுக்கான மே மாத ஊதியத்தை உடனடியாக  வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran